மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதிக்குப் பிறகு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
சிவப்பு மண்டலமும், ஆரஞ்சு மண்டலமும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதன்மூலம், அந்த பகுதியில் யார், யாருக்குத் தொற்று பரவியிருக்கிறது என்பதை அறிய முடியும். இந்த மண்டலங்களில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் நடமாட்டத்தை அனுமதிக்கக் கூடாது.
ரயில், விமான போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்துக்குத் தொடர்ந்து தடை நீடிக்கும். ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, டாக்சிகள் இயக்கவும் அனுமதியில்லை. சலூன்கள், அழகு நிலையங்களுக்கும் அனுமதியில்லை.
பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுமதியுடன் ரயில், விமான பயணத்துக்கும், சாலைப் பயணத்துக்கும் அனுமதி வழங்கலாம்.
பச்சை மண்டலத்தில் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தவிரப் பிற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு 50 சதவீத பஸ்களை இயக்கலாம். பஸ்களில் பாதி அளவு பயணிகளையே ஏற்றிச் செல்லவேண்டும்.
கொரோனா பாதித்துள்ள மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர வேறு எதற்காகவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வெளியே செல்வதற்குக் கட்டுப்பாடுகள் நீடிக்கும்.அனைத்து மண்டலங்களிலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மருத்துவக் காரணங்களை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்லக்கூடாது.
பச்சை மண்டலத்தில் மதுபானம், புகையிலை பொருள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒரே சமயத்தில் 5 பேருக்கு மேல் கடையில் நிற்கக் கூடாது. குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் கட்டுமானம் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் இருந்தால், கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
சிவப்பு மண்டலத்தில் அத்தியாவசிய பொருட்களை மட்டும் ஆன்லைனில் விற்பதற்கு அனுமதி உண்டு. தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். போக்குவரத்து வசதி செய்து கொடுக்கும் நிலையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படலாம். பிற தொழிற்சாலைகளைப் பொறுத்தமட்டில் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சணல், தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ஷிப்டு முறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றிச் செயல்படலாம். அனைத்து வகையான சரக்கு போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆரஞ்சு மண்டலத்தில் வாடகை கார் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், காரில் டிரைவருடன் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.
கிராமப்புறங்களில் வேளாண்மை, செங்கல் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.