தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1032 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, நமது நாட்டிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று(மே1) ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்தது. தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாகப் பாதித்தவர்களில் 117 பேர் ஆண்கள், 86 பேர் பெண்கள் ஆவர்.
இன்று மட்டும் 9365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் ஒரு லட்சத்து 20,083 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 54 பேரையும் சேர்த்து இது வரை 1312 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் புதிதாக 176 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 1032 ஆனது. இது தவிரச் செங்கல்பட்டில் புதிதாக 8 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 2 பேருக்கும், மதுரையில் 3 பேருக்கும், திருவள்ளூரில் 6 பேருக்கும், தஞ்சாவூரில் 2 பேருக்கும், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், நாகை மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
கோவையில் 141, திருப்பூர் 112, திண்டுக்கல் 81, ஈரோடு 70, நெல்லை 63, நாமக்கல் 59, செங்கல்பட்டு 86, தஞ்சை 57, திருவள்ளூர் 61, திருச்சி 51 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.