நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்கு நூறு கோடி செலவிட்ட அரசு, உணவின்றி தவிக்கும் தொழிலாளர்களிடம் ரயிலில் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார். மேலும், தொழிலாளர்களுக்குக் காங்கிரஸ் கட்சி, ரயில் கட்டணத்தை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் பிற மாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து உணவின்றி தவிக்கிறார்கள்.
இவர்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல போக்குவரத்து வசதி கோரி பெரும் போராட்டங்களில் ஈடுபடவே, மத்திய அரசு சிறப்பு ரயில்களை விட்டுள்ளது. ஆனால், இந்த ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதற்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆங்காங்கே உணவின்றி தவிக்கிறார்கள். அவர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பச் செல்வதற்கு ரயிலில் கட்டணம் வசூலிக்கிறார்கள். இது கொடுமையானது. வெளிநாடுகளில் தவித்த பணக்காரத் தொழிலாளர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து வந்த மத்திய அரசு, இவர்களிடம் ரயில் கட்டணம் வசூலிப்பது முறையற்றது.
கடந்த பிப்.24ம் தேதி அகமதாபாத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் போக்குவரத்து மற்றும் உணவு செலவுக்கு ரூ.100 கோடி செலவிட்ட மோடி அரசு, இப்போது வேலையிழந்து தவிக்கின்ற தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிப்பது அநியாயம். எனவே, அவர்களுக்காகக் காங்கிரஸ் கட்சியே ரயிலில் கட்டணம் செலுத்தும். ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும், அம்மாநிலத்தில் உள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு ரயில் கட்டணம் செலுத்தி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதே போல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு புறம் சொந்த ஊருக்குத் திரும்பும் வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் ரயிலில் கட்டணம் வசூலிக்கிறார்கள். இன்னொரு புறம், ரயில்வே அமைச்சகம் பிரதமரின் நிதிக்கு ரூ.151 கோடியை நன்கொடையாக அளிக்கிறது. இந்த புதிரைத் தீர்த்து வையுங்கள் என்று சாடியுள்ளார்.