கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்ற தொழிலாளர்கள் மூலம் அங்கு கொரோனா பரவியுள்ளது.தமிழகத்தில் நேற்று மாலை வரை 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று மட்டும் புதிதாக 266 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 203 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடலூர் மாவட்டத்தில் 9 பேருக்குக் கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலையில் கடலூர் மாவட்டத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருமே கோயம்பேடு சந்தைக்குச் சென்றுவிட்டு சரக்கு வாகனங்களில் திரும்பியவர்கள். தமிழக அரசின் குழப்பமான ஊரடங்கிற்குள் ஊரடங்கு அறிவிப்பால், கடந்த 25ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் 50 ஆயிரம் பேர் வரை குவிந்தனர். அந்த கூட்டத்திலிருந்த சில கொரோனா நோயாளிகள் மூலம்தான் ஏராளமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது என்று கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் இது வரை 160 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இவர்களில் 125 பேர் வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் தற்போது சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தனி வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 435 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலும் கொரோனா வேகமாகப் பரவி வருவதால், அம்மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர்.