விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு.. 8பேர் பலி, 800 பேர் உடல்நிலை பாதிப்பு..

800 people moved to hospitals in Visakhapatnam chemical plant incident.

by எஸ். எம். கணபதி, May 7, 2020, 13:10 PM IST

விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவு சம்பவத்தில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. இங்கு எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற கெமிக்கல் தொழிற்சாலை இருக்கிறது. இங்கிருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ரசாயன வாயு கசிந்தது. இது சுற்றியுள்ள கிராமங்களில் பரவியதால், மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடும் அவதியடைந்தனர்.


மக்களுக்குக் கண் எரிச்சலும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் சாலைகளில் சென்றவர்கள் சுருண்டு விழுந்தனர். காலை 8 மணிக்கெல்லாம் சாலையோரங்களில் பலர் மயங்கிக் கிடந்தனர். உடனடியாக, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.இதையடுத்து, ஆம்புலன்ஸ் வேன்கள் வரவழைக்கப்பட்டு, மயங்கிக் கிடந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். தற்போது அங்கு காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவத் துறையினர் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே, ஆந்திர அரசு அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்குள் ஆய்வு செய்து, அதன் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் முதலுதவி சிகிச்சையில் குணமடைந்தனர்.இந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார். அதன்பின், உள்துறை அமைச்சக அதிகாரிகள், பேரிடர் மீட்பு துறை அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு தலைவர்களும் விஷவாயு கசிவு சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 1984ம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இதே போல் விஷவாயு கசிவு சம்பவம் நடந்தது. அப்போது, யூனியன் கார்பைடு கம்பெனியில் விஷவாயு கசிந்து 3500 பேர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

You'r reading விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு.. 8பேர் பலி, 800 பேர் உடல்நிலை பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை