இந்திய அளவில் இருக்கும் பெண் அரசியல் கட்சித் தலைவர்களில் முதன்மையாகத் திகழ்பவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மாநில அளவிலும் தேசிய அளவிலும் பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கு அவர் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறார். இந்நிலையில், இனவாத வன்முறையைத் தடுக்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் அவர் மக்களுக்கு புதிய யோசனை ஒன்றைக் கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, `இனவாத வன்முறை இந்திய அளவில் கோலோச்சி வருகிறது. அதற்கு முதன்மைக் காரணம் பா.ஜ.க-வும் அதனைச் சேர்ந்த அமைப்புகளும்தான். அப்படிப்பட்ட வன்முறையாளர்களைத் தடுக்க மேற்கு வங்க அரசுடன் மக்களும் கூட்டணி சேர வேண்டும்.
இனவாத வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் பற்றி துப்புக் கொடுத்தால், அவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும். தரப்படும் தகவலைப் பொறுத்து அரசாங்க வேலையோ பணப் பரிசோ கொடுக்கப்படும்.
இனவாத வன்முறையில் ஈடுபடும் எவராக இருந்தாலும் சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவர்’ என்று எச்சரித்துள்ளார். அவரின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.