நாடு முழுவதும் ரயில்கள் நாளை முதல் இயக்கம்.. இ்ன்று முன்பதிவு செய்யலாம்..

Railways will resume train operations from May 12.

by எஸ். எம். கணபதி, May 11, 2020, 09:45 AM IST

நாடு முழுவதும் வரும் 17ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், நாளை முதல் ரயில்களை படிப்படியாக இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில், பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதலே ரயில்களை படிப்படியாக இயக்கப்படும் என்ற ரயில்வே அமைச்சகம் அறிவித்திருக்கிறது.


இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
மே 12-ம் தேதி(நாளை) முதல் ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும், முதல் கட்டமாக டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், ஆமதாபாத், செகந்திராபாத், திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு 15 சிறப்பு ரயில்கள் விடப்படும். இவை மீண்டும் டெல்லிக்கு திரும்பி வருவதையும் சேர்த்தால் மொத்தம் 30 சர்வீஸ் இயக்கப்படும்.
இந்த ரயில்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இன்று(மே11) மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது. மக்கள் கூட்டம் சேருவதைத் தவிர்ப்பதற்காக ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்கப்படாது. பிளாட்பார்ம் டிக்கெட்டும் விற்கப்படாது.

முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்குக் காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதித்த பின்பே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You'r reading நாடு முழுவதும் ரயில்கள் நாளை முதல் இயக்கம்.. இ்ன்று முன்பதிவு செய்யலாம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை