தமிழகத்தில் டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறப்பு.. சலூன்களுக்கு அனுமதியில்லை..

All shops including Tea shops opened in Tamilnadu.

by எஸ். எம். கணபதி, May 11, 2020, 09:42 AM IST

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் டீக்கடைகள், எலக்ட்ரிகல், ஹார்டுவேர்ஸ், ஜவுளிக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அதே சமயம், சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசு கடந்த 3ம் தேதி ஊரடங்கை நீட்டித்த போது, பல கட்டுப்பாடுகளை தளர்த்தியது. மதுக்கடைகள் உள்பட பல்வேறு கடைகளை திறக்கவும் அனுமதித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:
தமிழகம் முழுவதும் மே11ம் தேதி(இன்று) முதல் டீக்கடைகள் (பார்சல் மட்டும்), பேக்கரிகள் (பார்சல் மட்டும்), உணவகங்கள் (பார்சல் மட்டும்), பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்,கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள், மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் ஆகியவற்றை திறக்கலாம்.

மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள், மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள், சிறிய நகைக் கடைகள் (ஏ.சி. வசதி இல்லாதவை), சிறிய ஜவுளிக் கடைகள் (ஏ.சி. வசதி இல்லாதவை), மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள், பெட்டி கடைகள், பர்னிச்சர் கடைகள் திறக்கலாம்.

மேலும், சாலையோர தள்ளுவண்டி கடைகள், சலவை கடைகள், கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகள், வாகன விற்பனை நிலையங்கள், வாகன பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகள், விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து கடைகள், டைல்ஸ், பெயிண்ட் கடைகள், எலக்ட்ரிகல், ஆட்டோமொபைல் விற்பனை கடைகள், நர்சரி கார்டன்கள், மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள், மரம் அறுக்கும் கடைகள் ஆகியவையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.


ஆனால், சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்களை திறக்க அனுமதியில்லை.
கடை உரிமையாளர்கள், ஏ.சி. போடாமல் இருப்பதுடன், வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கடை வாசலிலும் கிருமி நாசினி பயன்படுத்தப்பட வேண்டும்.இந்த செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர்களும், மாநகராட்சி கமிஷனர்களும், காவல் துறையினரும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு, மாமூல் நிலை காணப்படுகிறது. குறிப்பாக, அதிகாலை 5 மணி அளவிலேயே டீக்கடைகள் திறக்கப்பட்டன. சென்னை புறநகர்களில் உள்ள டீக்கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் அட்டை டம்ளர்களில் டீ, காபி கொடுத்தனர். பார்சல் மட்டுமே தர வேண்டுமென்று கூறப்பட்டாலும், இப்படி டீ, காபி கொடுத்து கடையை விட்டு சற்று தள்ளிப் போய் குடிக்குமாறு வாடிக்கையாளர்களிடம் கூறினர். கிராமங்களில் டீக்கடைகளில் கூட்டம் சேராமல் இருக்க காவல் துறையினர் ரோந்து சென்றனர். மேலும், கண்ணாடி கிளாஸ்களில் டீ விற்பனை செய்வதை தடுத்தனர்.

You'r reading தமிழகத்தில் டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறப்பு.. சலூன்களுக்கு அனுமதியில்லை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை