நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 2,206 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா வைரஸ், பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 50 நாட்களை நெருங்கிய போதிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. பிரதமர் அமைத்துள்ள நிபுணர் குழு மே முதல் வாரத்தில், புதிதாக கொரோனா பாதிப்பே இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது. ஆனால், தினமும் புதிதாக 3 ஆயிரம், 4 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 11) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 67,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 20,916 பேர் குணமடைந்துள்ளனர். 44,029 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,206 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 4213 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.மகாராஷ்டிராவில் 22,177 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 832 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் 8194 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 493 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 6923 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழகத்தில் 7204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 47 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.