ஊரடங்கால் பாதித்துள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி நிதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது 3 முறை நீட்டிக்கப்பட்டாலும் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. மே 17ம் தேதி முடிவடையும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்றிரவு அறிவித்துள்ளார். மேலும், முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளுக்காக ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியதாவது:ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி நிதித் திட்டம் செயல்படுத்தப்படும். அதாவது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவிற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாடு சுயச் சார்புடையதாக வலிமை பெறுவதற்கு இந்த திட்டம் உதவிக்கரமாக இருக்கும்.
இந்த திட்டத்தால், சிறுகுறு நடுத்தரத் தொழில்களுக்கு ஊக்கம் கிடைக்கும். தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு உதவிக்கரமாக இருக்கும். இந்த திட்டத்தின் சாரம்சங்களை நிதியமைச்சகம் வெளியிடும்.
இவ்வாறு மோடி அறிவித்தார்.