கொரோனா ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்றும், 4வது ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும். அதன் புதிய விதிகள் குறித்து மே 18ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. முதலில் ஏப்.14ம் தேதி வரையும், பின் மே3ம் தேதி வரையும், தற்போது மே 17 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று முன் தினம்(மே11) மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் நீண்ட நேரம் விவாதித்தார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்றிரவு 8 மணியளவில் அவர் தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:ஒரு வைரஸ் நோய் உலகத்தையே உருக்குலைத்து விட்டது. உலக வரலாற்றில் இது வரை இப்படி ஒரு பொது முடக்கத்தை நாம் சந்தித்ததே இல்லை. கொரோனா வைரஸ் நோயுடன் கடந்த 4 மாதங்களாக உலகமே போராடி வருகிறது. 4 மாதத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் நமக்குச் சுயச்சார்பை கற்றுத் தந்துள்ளது. நாம் வெளிநாடுகளை நம்பாமல் சுயமாகச் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் மருத்துவப் பாதுகாப்பு கருவிகளையும்(பி.பி.இ.), என்.95 முகக் கவசங்களையும் பெற முடியாமல் இருந்தோம். ஆனால், இப்போது நாமே 2 லட்சம் மருத்துவப் பாதுகாப்பு கருவிகளையும், 2 லட்சம் என்.95 கவசங்களையும் உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துவிட்டோம். அது மட்டுமல்ல, உயிர்காக்கும் மருந்துகளை உலகத்திற்கு வழங்கும் வகையில் இந்தியா இருக்கிறது.
கொரோனாவை எதிர்த்து நாம் போராடி வரும் இந்த சூழலில், பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுகளின் ஆலோசனைகளைப் பெற்று, மக்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பின் புதிய விதிகளைத் தெரிவிப்போம். இந்த ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும். இதன் புதிய கட்டுப்பாடுகள் குறித்து மே 18ம் தேதிக்கு முன்பாக தெரிவிக்கப்படும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.