தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 8716 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 427 பேர் ஆண்கள். 288 பேர் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை. இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 83 பேரையும் சேர்த்து 2134 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 11,632 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 2 லட்சத்து 66,687 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் தினமும் சராசரியாக 500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 4882 ஆக அதிகரித்துள்ளது. நேற்று, சென்னையைத் தவிர, செங்கல்பட்டில் 35 பேர், அரியலூர் 36, திருவள்ளூர் 13, காஞ்சிபுரம் 24, பெரம்பலூர் 27 மற்ற மாவட்டங்களில் 2, 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் மூலம்தான் அரியலூர், கடலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.
தற்போது சென்னையில் 4882 பேருக்கும், கடலூர் 396, அரியலூர் 344, செங்கல்பட்டு 391, திருவள்ளூர் 467, விழுப்புரம் 299, காஞ்சிபுரம் 156 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 23407 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 2வது இடத்தில் குஜராத் இருந்து வந்தது. தற்போது தமிழ்நாடு 8718 என்று 2வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத்தில் நேற்றைய நிலவரப்படி 8541 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 4வது இடத்தில் டெல்லியில் 7233 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.