டெல்லியில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளையும் திறப்பதற்குக் கிழமை வாரியாக அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 78 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. டெல்லியில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. டெல்லியில் கொரோனா பரவிய பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் சில தொழில்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல்வர் கெஜ்ரிவால் இன்று(மே14) நிருபர்களிடம் கூறியதாவது:
ஊரங்கை முழுவதுமாக தளர்த்துவது, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது உள்ளிட்டவை குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டோம். சுமார் 5 லட்சம் பேர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள், சலூன், பியூட்டி பார்லர்களை திறக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளை இம்மாதம் திறக்க வேண்டாம் என்று கோரியுள்ளார்கள்.
பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே ஒற்றைப்படை பதிவெண் வாகனங்களை ஒரு நாளும், இரட்டைப்படை பதிவெண் வாகனங்களை இன்னொரு நாளும் இயக்கியது போல், இப்போதும் முடிவெடுக்க உள்ளோம். எனவே, சில வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட கடைகள் ஒரு கிழமையிலும், மற்றவை இன்னொரு கிழமையும் திறக்கப்படும். இது போன்று சில முடிவுகளை கவர்னர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினரிடம் ஆலோசித்து அவற்றை மத்திய அரசுக்குப் பரிந்துரைப்போம். பின்னர், அது குறித்து அறிவிப்போம்.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.