ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் 80, 90களில் ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகும் போது தியேட்டரே விழா கோலத்தில் இருக்கும், அதன்பிறகு விஜய், அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போதும் திருவிழாக் கோலத்துக்கு தியேட்டர்கள் மாறி கூட்டம் அலைமோதும். பின்னர் இந்த போட்டி தவிர்க்கப்பட்டது. பெரிய நடிகர்கள் படங்கள் எப்போதாவது ஒரு முறை போட்டியாக வெளியானது. அதுகூட ஒரு வாரக் கால அவகாசம் எடுத்து வெளியிடப்பட்டது. அதுபோன்ற திருவிழா கோலத்தை இனி தியேட்டர்களில் பார்க்க முடியுமா என்பது சந்தேகமாகி இருக்கிறது.
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மால்கள் மூடப்பட்டிருப்பதால் பட ரிலீஸ் என்பதே மறந்துவிடும் சூழல் உள்ளது. எனவே பழைய பாணியில் பிரபல நடிகர்களின் படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்து கூட்டத்தை ஈர்க்க தியேட்டர் அதிபர் ஐடியா கொடுத்திருக்கிறார்.
வெற்றி தியேட்டர் நிர்வாகி ராகேஷ் கவுதமன் இதுபற்றி டிவிட்டரில் கூறும்போது,விஜய் நடித்திருக்கும் மாஸ்டர், சூர்யா நடித்திருக்கும் சூரரைப்போற்று ஆகிய இரண்டு படங்களும் தான் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு இழுக்கும் டிரம்ப் கார்டுகள். அதன் தயாரிப்பாளர்கள் வரும் தீபாவளி தினத்தில் புத்திசாலித் தனமாக இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்தால் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்க முடியும். இது எனது தனிப்பட்ட கருத்து எனத் தெரிவித்திருக்கிறார்.