நாடு முழுவதும் 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் விடப்படும். மின் விநியோகத் துறையில் தனியார் மயம், ராணுவத் துறையில் அன்னிய முதலீடு 74 சதவீதமாக அதிகரிப்பு போன்ற அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி வருமாறு :யூனியன் பிரதேசங்களில் மின் விநியோக நிறுவனங்கள் தனியாரிடம் அளிக்கப்படும். மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதால் மின்சார சப்ளை மேம்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும். மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைக் கட்டமைப்பதில் தனியார் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்வெளி ஆராய்ச்சியில் தனியாருக்கு வாய்ப்பு தரப்படும். இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியாரையும் அனுமதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
லக்கரி வெட்டி எடுக்கும் தொழிலில் தனியாரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி வெட்டி எடுக்கும் துறை கட்டமைப்பு வசதிக்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.
ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதம் மற்றும் உதிரிப்பாகங்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படும். அதேசமயம், ராணுவத் துறையின் அன்னிய நேரடி முதலீடு சதவீதத்தை 49ல் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
விமானப் போக்குவரத்துத் துறையில் தனியாருக்கு அதிக வாய்ப்பு தரப்படும். 6 புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணி தனியாரிடம் விடப்படும். 12 விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகளும் தனியாருக்கு விடப்படும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.