டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ராகுல்காந்தி, அவர்களின் துயரங்களை விசாரித்தறிந்தார். பின்னர், அவர்களுக்கு உணவு மற்றும் வாகன உதவிகளைச் செய்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடவசதி எதுவும் இல்லாமல் தவித்தனர். பல நாட்களாகியும் பஸ், ரயில் போக்குவரத்து வசதியும் இல்லாததால், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மேல் நடந்தே செல்கின்றனர்.
இந்நிலையில், டெல்லியிலிருந்து நடைப்பயணமாகச் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்களைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று சந்தித்துப் பேசினார். அவர்கள் தங்கள் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற போது, சுக்தேவ் விஹார் பாலத்தின் அருகே அவர்களை ராகுல்காந்தி சந்தித்தார். அவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு உணவு அளித்து, சொந்த ஊர் செல்ல வாகன வசதிகளைச் செய்து கொடுத்தார்.
இது பற்றி, மகேஷ்குமார் என்ற தொழிலாளி கூறுகையில், நாங்கள் கடந்த 50 நாட்களாக வேலையும் இல்லாமல், உணவும் கிடைக்காமல் தவித்து வந்தோம். இதற்கு மேலும் இங்கு இருக்க முடியாது என்பதால், சொந்த ஊருக்கு நடந்தோம். ராகுல்காந்தி வந்து எங்களைப் பார்த்து விசாரித்து உதவி செய்தார். இது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்றார்.