மகாராஷ்டிரா உள்பட வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு வந்த 93 பேர் உள்பட 477 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது.இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவியிருக்கிறது. ஆரம்பத்தில் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரவியிருந்தது. அடுத்ததாக, கோயம்பேடு மார்க்கெட் ஒரு கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறி, அங்கிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல ஆயிரம் பேருக்கு நோய் பரவியது. அது கட்டுக்குள் வரும் நிலையில், தற்போது வெளிமாநிலங்களிலிருந்து கொரோனா பாதிப்பு வரத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் நேற்றைய நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 384 பேருக்கும், வெளிமாநிலத்திலிருந்து வந்த 93 பேருக்கு மொத்தம் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் டாக்காவிலிருந்து வந்த 4 பேர், மகாராஷ்டிரா 81, குஜராத் 7, ஆந்திரா 1 என்று 93 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10.585 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று பலியான 3 பேருடன் சேர்த்து உயிரிழப்பு 74 ஆனது. நேற்று டிஸ்சார்ஜ் ஆன 939 பேருடன் சேர்த்து 3538 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது வரை 2 லட்சத்து 99,176 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 6271 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் 348 பேர், செங்கல்பட்டு 470, கடலூர் 416, திருவள்ளூர் 527, காஞ்சிபுரம் 180, திருநெல்வேலி 180 பேர் என்று இந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.