ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்கு மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக, பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், ஊரடங்கு மே 3ம் தேதி வரையும், தற்போது மே 31ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு-4 கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்றும் தேவைக்கேற்ப மாநில அரசுகள் அந்தந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சில மாநிலங்களில் பஸ் போக்குவரத்து உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளும் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் குறிப்பாக கொரோனா பாதித்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும். மாநில அரசுகள் இதை முறையாக பின்பற்ற வேண்டும். தேவை ஏற்பட்டால் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தலாமே தவிர தளர்த்தக் கூடாது. மற்ற பகுதிகளில் மாநில அரசுகள் விதிமுறைகளை வகுத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.