ஆயுத உற்பத்தித் துறையில் 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதிப்பதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ராணுவத் துறையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதம் மற்றும் உதிரிப்பாகங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படும். அதேசமயம், ராணுவத் தளவாடத் தொழிலில் அன்னிய நேரடி முதலீடு சதவீதத்தை 49ல் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவில் உள்ள ராணுவத் தளவாட உற்பத்தி போர்டு அலுவலகம் முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தினர் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். தொழிற்சங்கத்தின் செயலாளர் டோலா சென் கூறுகையில், ராணுவத் தளவாட உற்பத்தியில் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக அதிகரிக்க விட மாட்டோம். மத்திய அரசின் முடிவைக் கடுமையாக எதிர்ப்போம் என்றார்.