சட்டமேலவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட உத்தவ் தாக்கரே, கவர்னரை மரியாதை நிமித்தம் சந்தித்து வாழ்த்து பெற்றார்.தேர்தலில் போட்டியிடாமல் பதவியேற்ற முதல்வர் அல்லது அமைச்சர்கள் பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராகவோ, சட்டமேலவை உறுப்பினராகவோ பொறுப்பேற்க வேண்டும். அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
இதன்படி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மே 27ம் தேதிக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி ஆகத் தேர்வாக வேண்டும். தற்போது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், சட்டமேலவை தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பின், உத்தவ் தாக்கரே வேண்டுகோளை ஏற்று காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கோஷ்யாரி பரிந்துரைத்தார்.
கவர்னரின் பரிந்துரையை பரிசீலித்த இந்திய தேர்தல் ஆணையம், மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை அறிவித்தது. இதன்படி, வரும் 21ம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட்டு, அன்றே வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், 6 காலியிடங்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட 6 பேரே போட்டியிட்டனர். இன்று மனுக்கள் வாபஸ் முடிந்த பின்பு, 6 இடங்களுக்கு 6 பேரே போட்டியிட்டதால், அவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே சட்டமேலவை உறுப்பினராக பொறுப்பேற்றார். அதன்பின்னர், அவர் ராஜ்பவன் சென்று கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே உடன் சென்றார்.