தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த வாரம் தாங்கள் படப்பிடிப்பிற்கு பிந்திய வேலைகள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள் அதற்காக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போது பல கோடி ரூபாய் புழங்கும் தமிழ் திரையுலகில் அத்தனை கோடி ரூபாயும் முடங்கிப்போய் உள்ளது. தொழிலாளர் தோழர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். ஆகவே முதல்வர் அவர்கள் நிலைமையை தாயுள்ளதோடு பரிசீலித்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாலிவுட் திரையுலகில் பாதுகாப்பு உடைகள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்துப் படப்பிடிப்பு தொடங்கி நடை பெறுவதுபோல இங்கும் தாங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களும், திரைப்பட தொழிலாளர்களும் படப்பிடிப்புகளை மீண்டும் துவக்கி நடத்துவதற்கு ஆணை பிறப்பித்து திரையுலகினரின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருமாறு தங்களை இருகரம் குவித்து பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளனர்.
இந்த கடிதத்தில் எஸ்.வி.சேகர், என்,ராமசாமி என்கிற முரளி இராமநாராயணன், ராதாகிருஷ்ணன், சந்திரபிரகாஷ்ஜெயின், கேஜேஆர் (ராஜேஷ்) கையெழுத்திட்டுள்ளனர்.