இந்தியாவில் கொரோனா பலி 3720 ஆக அதிகரிப்பு..

by எஸ். எம். கணபதி, May 23, 2020, 10:46 AM IST

இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 25,101 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இந்நோய்க்கு 3720 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் கொரோனா பரவிக் கொண்டுதான் இருக்கிறது. தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 6654 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.


இன்று(மே 23) காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 25,101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 3250 பேருடன் சேர்த்து 51,783 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று உயிரிழந்த 137 பேருடன் சேர்த்து கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3720ஆக அதிகரித்துள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44 ஆயிரம் பேருக்கும், தமிழ்நாட்டில் 14783 பேருக்கும், குஜராத்தில் 13,268 பேருக்கும், டெல்லியில் 12,319 பேருக்கும் கொரோனா பாதித்திருக்கிறது. கொரோனா பாதித்தவர்களில் 95 சதவீதம் 10 மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். அதே போல், கொரோனா இறப்பும் மும்பை, அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை மாநகரங்களில்தான் அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் விகிதம் இந்தியாவில் 3 சதவீத அளவாகவே உள்ளது. அதே சமயம், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 சதவீதமாக உள்ளது.


More India News