லடாக் பகுதியில் இந்தியா-சீனா படைகளின் மோதலால் சில நாட்களாகத் தொடர்ந்து பதற்றம் நீடித்த வருகிறது. சீனா விமான தளத்தை விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது.
மேலும், கிழக்கு லடாக் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணியைத் தடுக்கும் வகையில் சீன படைகள் மோதலை ஆரம்பித்தன. இதையடுத்து, கடந்த சில நாட்களாக இருதரப்பு வீரர்களும் மோதிக் கொண்டு வருகின்றனர். இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.ஏற்கனவே அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளை உரிமை கொண்டாடி பிரச்சனையை ஏற்படுத்தி வரும் சீனா, தற்போது எல்லையில் கிழக்கு லடாக் உள்பட 4 இடங்களில் அத்துமீறி வருகிறது. மேலும், பங்காங் ஏரியிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் சீனா எல்லையில் உள்ள அந்நாட்டின் விமான தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. இது தொடர்பான சேட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி இந்த பிரச்சனை குறித்து நேற்று டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசித்தார். எந்த விதத்திலும் இந்தியாவின் பணிகளை நிறுத்தக் கூடாது என்றும் சீனாவிற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சீன அதிபர் ஜின்பிங் அந்நாட்டு ராணுவத்திடம் எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்க ராணுவப்படையாயினர் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.