கொரோனா ஊரடங்கு.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..

schools opening in tamilnadu will be delayed to August.

by எஸ். எம். கணபதி, May 27, 2020, 09:23 AM IST

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இன்னும் ஓரிரு மாதங்கள் வரை தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. எனினும், ஜூலை மாதத்தில் திறக்க வாய்ப்புள்ளதா என்று அரசு ஆலோசித்த வருகிறது.தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாலும், பல மாவட்டங்களில் கொரோனா பரவி விட்டதாலும் இந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று பேச்சு அடிபட்டது.


ஆனால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, கடந்த 12ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, ஜூன்1-ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரம் திறக்கப்படும். ஆனால், தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் பல மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் குறைவான பாதிப்பு இருந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளிகளைத் திறந்தால் மாணவர்கள் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால், பள்ளிகள் திறப்பதை ஆகஸ்ட் வரை தள்ளிப் போட வேண்டுமென்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது பற்றி, மருத்துவ நிபுணர்களிடமும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆகஸ்ட் வரை தள்ளிப் போட்டால் அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டம் வெகுவாக பாதிக்கும் என்று கருதப்படுவதால், ஜூலையில் பள்ளிகளைத் திறக்கலாமா என விவாதிக்கப்பட்டது. ஜூன் மாதம் வரை கொரோனா பாதிப்பைப் பார்த்து, ஜூலையில் பள்ளிகள் திறக்கலாமா என்று விவாதிக்கப்பட்டது. எனவே, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படாது என்று தெரிகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார்.

You'r reading கொரோனா ஊரடங்கு.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை