தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 17,728 ஆனது. நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. சீன வைரஸ் நோயால் இந்தியா முழுவதும் ஒன்றே கால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4200 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் தினமும் புதிதாக 600, 700 பேருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(மே26) மட்டும் புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 54 பேரும் அடக்கம். மகாராஷ்டிராவிலிருந்து வந்த 35பேர், குஜராத் 6, கேரளா 1, கர்நாடகா 1, டெல்லி 2, தெலங்கானா 3, உ.பி. 2 மற்றும் துபாயிலிருந்து வந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.
இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728 பேராக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 611 பேரையும் சேர்த்து மொத்தம் 9342 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 9 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் தான் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. தினமும் 500 பேருக்கு குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6056 பேர் குணமடைந்துள்ளனர்.சென்னை தவிர, செங்கல்பட்டில் 23 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும், சேலத்தில் 10 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 8 பேருக்கும், கடலூரில் 4 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.