இந்தியாவில் ஒரு லட்சத்து 51,767 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 64 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 4337 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாகப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 17 லட்சம் பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் இது வரை ஒன்றரை லட்சம் பேருக்கு நோய் பரவியிருக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே27) காலை வெளியிட்ட அறிக்கையின் படி, நேற்று ஒரே நாளில் 6387 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கொரோனா பாதித்த 170 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, இந்தியாவில் ஒரு லட்சத்து 51,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 64,425 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 4337 ஆக அதிகரித்துள்ளது.மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத் மாநிலங்களில்தான் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 17,728 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 127 பேர் பலியாகியுள்ளனர்.