கர்நாடகாவில் கோயில்கள், சர்ச்சுகள் மற்றும் மசூதிகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 51,767 பேருக்குப் பரவியிருக்கிறது. இதில் 4337 பேர் உயிரிழந்து விட்டனர்.
கொரோனா பரவாமல் தடுப்பதற்கு மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென்று டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக, பிரதமர் மோடியின் உத்தரவுப்படி கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், ஊரடங்கு மே 3, மே 17 எனக் கடைசியாக மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படாததால், மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப மே மாதத்திற்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜூன் 1ம் தேதி முதல் கோயில்கள், சர்ச்சுகள் மற்றும் மசூதிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்திருக்கிறார்.