மகாராஷ்டிராவிலிருந்து ஒரே நேரத்தில் 36 ரயில்களை அனுப்பி, மேற்கு வங்கத்திற்கு கொரோனாவை பரப்ப பியூஸ் கோயல் முயற்சிக்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமித்ஷாவையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் இது வரை கொரோனாவால் 4192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 217 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அம்பன் புயல் தாக்கி பெரும் சேதமும் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேரில் புயல் சேதங்களைப் பார்வையிட்டு ரூ.1000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர்களைக் கடுமையாகத் தாக்கினார். அவர் கூறியதாவது:பாஜக இந்த இக்கட்டான சூழலிலும் அரசியல் செய்கிறது. நான் அமித்ஷாவிடம் நேரிடையாகவே கேட்டேன். மேற்கு வங்கத்திற்குத் தொடர்ந்து மத்தியக் குழுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறீர்களே... மாநில அரசால் எதுவுமே செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தால், நீங்களே நேரடியாக வந்து கொரோனா தடுப்பு பணிகளையும், புயல் நிவாரணப் பணிகளையும் பாருங்கள்.. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை... என்றேன். அதற்கு அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு உள்ள போது, நாங்கள் எப்படிக் கவனிக்க முடியும்? என்று பதிலளித்தார்.
பீகார் உள்பட பாஜக ஆளும் மாநிலங்களிலும்தான் கொரோனா அதிகமாகப் பரவியிருக்கிறது. அப்படியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தைக் குறிவைத்து அரசியல் செய்வது ஏன்? கொரோனா பரவல் தடுக்கப்பட வேண்டும். மத்திய அரசு ஊரடங்கையும் அறிவித்து விட்டு, ரயில்களையும், விமானங்களையும் இயக்கினால் எப்படி?
நாங்கள் மேற்கு வங்கத்திற்கு எத்தனை ரயில்களை இயக்க வேண்டுமென்று அட்டவணை போட்டுக் கொடுத்துள்ளோம். ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மும்பையில் இருந்து 36 ரயில்களை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இயக்குகிறார். மகாராஷ்டிர அரசிடம் கேட்டதற்கு, எங்களுக்கே கடைசி நேரத்தில்தான் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது என்று பதில் வந்தது.
கொரோனா தடுப்பு பணியையும், புயல் நிவாரணப் பணியையும் செய்து கொண்டிருக்கிறோம். இப்போது ஒரே நேரத்தில் 2 லட்சம் பேரை ரயிலில் அனுப்பி வைத்தால், எப்படி அவர்களை கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்த முடியும்? பாஜக இந்த நேரத்தில்தானா அரசியல் செய்ய வேண்டும்? இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டுச் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.