கொரோனா அதிகம் பரவியுள்ள பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், 4 முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதித்த பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அன்லாக் 1 என்ற பெயரில் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட விதிமுறைகள் வருமாறு:கொரோனா பரவியுள்ளதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஊர்களில் ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுகிறது. முதல் கட்டமாக, வழிபாட்டுத் தலங்கள், ஆன்மீகத் தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை ஜூன் 8ம் தேதி முதல் திறக்கப்படலாம்.
பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர்களுடன் மாநில அரசு கலந்தாலோசித்து ஜூலை மாதத்தில் திறக்கலாம்.
விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், சமூக, அரசியல் திருவிழாக்கள் ஆகியவற்றுக்குப் பின்னாளில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், நோய்ப் பாதிப்பு இல்லாத பகுதிகளில் மாநில அரசுகளே தளர்வுகளை அறிவிக்கலாம் என்றும் அனைத்து பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.