உலகில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா 8வது இடத்திற்கு வந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் 18 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். அதைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கும், ரஷ்யாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.
கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது. கடந்த வாரம் வரை இந்தப் பட்டியலில் 9வது இடத்தில் இந்தியா இருந்து வந்தது. 8வது இடத்தில் ஜெர்மனி இருந்தது. ஆனால், நேற்று ஜெர்மனியை இந்தியா முந்தியது. ஜெர்மனியில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை நேற்றுடன் ஒரு லட்சத்து 85,398 ஆக அதிகரித்தது. இதனால், இந்தியா 8வது நாடாக உள்ளது. அதே சமயம், இந்தியாவில் 5000 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. மேலும், 87ஆயிரம் பேர் வரை குணமடைந்துள்ளனர். இது 47.76 சதவீதமாகும்.