மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயின்(ஹெச்.சி.கியூ) மாத்திரைகள் சாப்பிட்டதில் கொரோனா நோய் குறைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) கூறியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில்தான் 18 லட்சம் பேருக்கு நோய் பாதித்துள்ளது. அங்கு மட்டும் ஒரு லட்சம் பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் வராமல் தடுப்பதற்கு மலேரியா சிகிச்சை மருந்தாக உள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்தலாம் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு நோய்ப் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. ஆனாலும் அவர் ஹைட்ராக்சி குளோரோகுயின் சாப்பிட்டு வருவதாகக் கூறினார். ஆனால், உலக சுகாதார நிறுவனமோ, இந்த மாத்திரை சாப்பிடுவதில் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டது. ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் பலனை அறிவதற்காக மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு இவற்றை அளித்து ஆய்வு மேற்கொண்டது. நாடு முழுவதும் கொரோனா பாதித்த 624 பேர், நோய் அறிகுறி உள்ள 549 பேருக்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகளை அளித்து, ஆய்வு செய்தது. இதில், கொரோனா பாதித்த 624 பேரில் 378 பேருக்கும், நோய் அறிகுறி உள்ள 549 பேரில் 373 பேருக்கும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. இதையடுத்து, 4 அல்லது அதற்கு மேற்பட்ட குளோரோ குயின் மாத்திரைகள் சாப்பிட்டாலே கொரோனா பாதிப்பு குறைவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.