தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் புதிதாக 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(மே31) மட்டும் புதிதாக 1149 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வந்த 2 பேர், மியான்மரில் இருந்து வந்த ஒருவர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் உள்பட 95 பேர் அடக்கம்.
மகாராஷ்டிராவில் இருந்து 62 பேர், கர்நாடகாவில் இருந்து 6 பேர், டெல்லி 5 பேர், பீகார், குஜராத்திலிருந்து தலா 3 பேர், ராஜஸ்தான், மேற்குவங்கத்திலிருந்து தலா 2 பேர் மற்றும் சில மாநிலங்களில் இருந்து வந்த ஓரிருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 757 பேரையும் சேர்த்து மொத்தம் 12,757 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 13 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தினமும் 700 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது.சென்னை தவிர, செங்கல்பட்டில் 85 பேருக்கும், திருவள்ளூரில் 47 பேருக்கும், திருவண்ணாமலையில் 45 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.