இந்தியாவில் கொரோனா பாதிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டது. இதனால், உடனடியாக கொரோனா பரவலைத் தடுப்பது என்பது சாத்தியமில்லை என்று ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இந்நோய் பரவலைத் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி உத்தரவுப்படி, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பின், 5 முறை நீட்டிக்கப்பட்டாலும் பல தளர்வுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு இன்னும் சமூகப் பரவல் நிலைக்கு வரவே இல்லை என்று மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து கூறி வருகின்றன. அதாவது, யார் மூலம் பரவியது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பரவியிருப்பதுதான் சமூகப் பரவலாகும். ஆனால், இந்திய பொது மருத்துவக் கழகம், இந்தியத் தடுப்பு மருத்துவம் மற்றும் சமூக மருத்துவக் கழகம், இந்தியத் தொற்றுநோய் தடுப்புக் கழகம் ஆகியவற்றின் மருத்துவ நிபுணர்கள் குழு, அரசின் கூற்றை மறுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறி விட்டது என்றும் இதனால் இந்த கொரோனா பாதிப்பை உடனடியாக தடுப்பது என்பது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த குழுவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சமூக மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் சசிகாந்த், பி.எச்.யூ. மருத்துவ நிபுணர் டாக்டர் டி.சி.எஸ்.ரெட்டி உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இவர்கள் இருவருமே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின்(ஐ.சி.எம்.ஆர்) நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த குழு அறிக்கையில், மற்ற நிபுணர்களுடன் ஆலோசிப்பதுடன், தொற்றுநோய் தடுப்பு நிபுணர்களுடன் முன்கூட்டியே ஆலோசித்து அரசு திட்டமிட்டுச் செயல்பட்டிருந்தால், கொரோனா பரவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கையாண்ட விதத்தாலும் கொரோனா பரவல் அதிகமாகி விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது மாவட்ட அளவில் தொற்றுநோய் தடுப்பு மருத்துவர்கள் மற்றும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.