உங்களின் தேர்தல் அறிக்கை வாக்குறுதி என்ன? மாற்றமா அல்லது சீரமைப்பதா அல்லது குண்டாயிஸமா என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வலுத்துள்ளது. லெனின் சிலை அகற்றப்பட்டதை இந்தியாவெங்கும் பாஜகவினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இது குறித்து தமிழக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, “லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை; நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று ராஜா குறிப்பிட்டுள்ளார். இதற்கு நாடெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பின்னர் இதனை தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரூட்டில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்கத்தாவில் பாஜக மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜீயின் சிலையை சேதப்படுத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “லெனின், பெரியார், ஷியாம பிரசாத் முகர்ஜீயின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் நிகழ்ச்சி நிரல் என்ன? நமது குழந்தைகளுக்கு எதைக் கற்றுக்கொடுக்கிறீர்கள்?
தயவுசெய்து இந்த சிலை அரசியலை நிறுத்துங்கள்.. வன்முறைகள் வன்முறையையே அறுவடை செய்யும். உங்களின் தேர்தல் அறிக்கை வாக்குறுதி என்ன? மாற்றமா அல்லது சீரமைப்பதா அல்லது குண்டாயிஸமா? #JustAsking’ ” என்று பதிவிட்டுள்ளார்.