காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடக்கும் முயற்சியை திசை திருப்பவே பெரியார் சிலை விவகாரத்தை எழுப்பி இருக்கிறார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகமெங்கும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது.
பிறகு எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “பெரியார் பற்றி சிலர் கலக வார்த்தைகள் சொல்கிறார்கள். அந்த கலக வார்த்தைகள் ஏன் பேசப்படுகிறது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தற்போது முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அந்த முயற்சியை திசை திருப்பும் வகையில் இந்த பெரியார் சிலை விவகாரத்தை எழுப்பி இருக்கிறார்கள்.
பெரியார் சிலையை யாரும் தொட்டு விட முடியாது. பெரியாரை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள். பெரியார் உச்சம் மிக உயரமானது. அதை தொட்டு விட முடியாது. பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை. பெரியார் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்குதான் பாதுகாப்பு தேவை.
எச்.ராஜா வருத்தம் தெரிவித்து இருப்பதை என்னால் ஏற்க முடியாது. அவர் சொன்ன வார்த்தையை திருப்பி எடுத்தாலும் காயம் காயம்தானே. இது மத்திய அரசின் தூண்டுதலாக கூட இருக்கலாம். இப்போது அவர்கள் அதற்கும், எங்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். எச்.ராஜா மீது பா.ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.