திரிபுராவில் 4 சிலைகளை அகற்றி விட்டால், இந்த நாட்டில் இருந்து கம்யூனிஸ்ட்களை அழித்துவிடலாம் என நினைக்க வேண்டாம்; ஒரு நாளும் முடியாது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
இந்நிலையில் திரிபுராவில் அரங்கேற்றப்பட்டு வரும் சங்பரிவார் கும்பலின் வன்முறை குறித்து கேரள முதல்வர் தனது முகநூல் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் கூறியிருக்கும் பினராயி விஜயன், “திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், லெனின் சிலை அகற்றப்பட்ட நிகழ்வும், தேசிய அளவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடக்கும் சதியாகும். 4 சிலைகளை அகற்றிவிட்டால் இந்த நாட்டில் இருந்து கம்யூனிஸ்டுகளை ஒழித்துவிடலாம் என பாஜகவும், ஆர்எஸ்எஸ். அமைப்பும் நினைக்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளை இந்த நாட்டில் இருந்து அகற்றவே முடியாது.
கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தேசிய அளவில் மிகப் பெரிய சதி நடக்கிறது, அதில் ஒரு பகுதிதான் இந்த வன்முறையாகும். நாட்டில் ஜனநாயகத்தையும், மதச் சார்பற்ற தன்மையையும் இன்னும் பாதுகாப்பாக இருந்து வருவது கம்யூனிஸ்டுகளால்தான். இதற்காக ஏராளமான உயிர் தியாகத்தை கம்யூனிஸ்டுகள் செய்து இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.