சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது என சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 10 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவின் தொன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழக்கூடிய டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை தமிழக அரசு இடமாற்றம் செய்ய எடுத்து வரும் நடவடிக்கை தேவையற்றது.
125 ஆண்டு காலம் பழமைவாய்ந்த இக்கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும்பாலும் பின்தங்கிய சமூகப் பொருளாதார பின்னணி கொண்ட மாணவர்களே அதிகம் பயின்று வருகிறார்கள். தொழிற்கல்வி என்பதால் சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளோடு தன்னை இணைத்துக்கொண்டு பயிற்சியோடு இணைந்து பல அனுபவங்களையும் பெற்று வருகிறார்கள். மேலும், பல நவீன மாற்றங்களை உள்வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு இங்கு கிடைக்கிறது. இந்தக் கல்லூரியின் பெருமையே நீதிமன்றத்துடன் இணைந்து இருப்பதுதான். காஞ்சிபுரத்தில் சட்டக்கல்லூரிக்கான கட்டிடம் கட்டப்பட்டுவிட்டது என்கிற காரணத்துக்காக இடமாற்றம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேண்டுமானால், அங்கு ஒரு புதிதாக சட்டக்கல்லூரியை துவக்கலாம்.
தமிழக சட்டக்கல்லூரி படிக்கும் மாணவர்கள் சமூக அக்கறையோடு பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கிறார்கள் என்பதை சகித்துக்கொள்ள முடியாத தமிழக அரசு, சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் இக்கல்லூரியை இடம் மாற்றம் செய்வது என்பது உள்நோக்கம் கொண்டதாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்தும் இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முழுமையான ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறது.
போராடும் சட்டக்கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று சட்டக்கல்லூரியை இடமாற்றும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.