டெல்லியில் ஜூன் மாத இறுதிக்குள் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்திற்கு அடுத்து 3வது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு இது வரை 27,654 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 10,664 பேர் குணம் அடைந்துள்ளனர். 761 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1320 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.
தினம்தோறும் புதிதாக ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்த சூழலில், டெல்லி அரசு நியமித்துள்ள 5 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவக் குழு, இம்மாத இறுதிக்குள் டெல்லியில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவும். அதன்பின்னரே கொரோனா பரவல் கட்டுப்படத் தொடங்கும். எனவே, இன்னும் 2 மாதங்களுக்கு மக்கள் கட்டுப்பாடாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.