மத்தியப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் முதியவர் ஒருவர் சிகிச்சைக்குப் பணம் பாக்கி வைத்ததற்காக அவரை கட்டிலோடு கட்டி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனைக்கு ராஜ்கார் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயது முதியவர் லட்சுமி நாராயணா கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். தனக்கு வயிற்று வலி என்று கூறி, மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவருக்கு ஆரம்பத்தில் மருத்துவமனை செலுத்தக் கூறிய பணத்தை அவரது உறவினர்கள் செலுத்தினர்.
இதன்பின், அவருக்கு நோய் குணமாகி வீட்டுக்குப் புறப்படும் நேரத்தில் அவரிடம் மருத்துவமனை ஊழியர்கள் ஒரு பில்லை கொடுத்தனர். அதில் அவர் ரூ.11,270 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், முதியவரின் உறவினர்கள் யாரும் அங்கு இல்லை. அவர்கள் முன்பே வீட்டுக்குப் போய் விட்டிருந்தனர்.இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் அந்த முதியவர் தப்பி விடக் கூடாது என்பதற்காக அவரது படுத்திருந்த கட்டிலிலேயே கைகால்களைக் கட்டிப் போட்டனர்.
இந்த காட்சியைச் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அது வைரலாக பரவியதால், அந்த மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், ஷாஜாபூர் கலெக்டர் வீரேந்திரசிங் ராவத் கூறுகையில், இது பற்றி மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.