தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1500ஐ தாண்டியது. நேற்று மட்டும் 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. முதல் முறையாக, நேற்று(ஜூன்7) ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 4 பேர், குவைத்தில் இருந்து வந்த 3 பேர், டெல்லியில் இருந்து வந்த 7 பேர் மகாராஷ்டிரா 2 பேர், காஷ்மீர் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த தலா ஒருவர் என்று 18 பேரும் அடக்கம்.
தமிழகத்தில் தற்போது 31,667 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 604 பேரையும் சேர்த்து மொத்தம் 16.999 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 18 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 15,671 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 5 லட்சத்து 66,314 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.சென்னையில் நேற்று அதிகபட்சமாக 1155 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 55 பேர், தூத்துக்குடி 14 பேர், மதுரை 14 பேர், காஞ்சிபுரம் 16 பேர் மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சிலருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.