டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்படப் பல மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.இந்தியாவில் இது வரை இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடியின் உத்தரவுப்படி கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்பின், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, இம்மாதம் 30ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. எனினும், மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. இதையொட்டி, மாநில அரசுகள் அந்த மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. பஸ், ரயில் போக்குவரத்து மற்றும் சினிமா தியேட்டர்கள், மால்கள் போன்றவை தவிர மீதி அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், கோயில், சர்ச், மசூதி, குருத்வாரா போன்ற அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் இன்று முதல் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள் ஏற்று, கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.டெல்லியில் கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் இன்று காலையில் திறக்கப்பட்டன. பக்தர்கள் வரிசையில் சமூக இடைவெளி விட்டு வழிபாட்டுத் தலங்களுக்குள் அனுமதிக்கப்பட்டன. இதே போல், உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்பட பெரும்பாலான மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து பல்வேறு சமயத் தலைவர்களுடனும், தலைமைச் செயலாளர் சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, சில நிபந்தனைகளுடன் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இன்று வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்குத் தமிழக அரசு அனுமதிக்கவில்லை.