மூன்று மாதங்களாகச் சம்பளம் தரப்படாததால், டெல்லி கஸ்தூிபாய் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர்.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு 32,810 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 984 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் போடவே பணம் இல்லை என்றும் மத்திய அரசு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி தர வேண்டுமென்று துணை முதல்வர் மணீஷ்சிசோடியா ஏற்கனவே கூறியிருந்தார்.இந்த சூழலில், கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனை டாக்டர்கள், சம்பளம் கிடைக்காததால் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இது பற்றி, கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சங்கத் தலைவர் சுனில்குமார் கூறுகையில், டாக்டர்களுக்கு மார்ச் மாதம் முதல் 3 மாதங்களாகச் சம்பளம் தரப்படவில்லை. இந்த நேரத்தில் டாக்டர்கள் ஸ்டிரைக் செய்வது சரியாக இருக்காது. அதே நேரத்தில், நாங்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்ற முடியாது. அதனால், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளோம் என்றார்.