இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த குதிரைப்பேர அரசியலை நடத்துவீர்கள் என்று பாஜகவுக்கு ராஜஸ்தான் முதல்வர் கெலாட் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்படப் பல மாநிலங்களில் காலியாக உள்ள 24 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கோடிக்கணக்கில் பேரம் பேசி இழுப்பதை பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது. பாஜகவினருக்கு கொரோனா பரவலைப் பற்றியோ, சீனப் படைகள் ஊடுருவலைப் பற்றியோ எந்த கவலையும் இல்லை. எப்படியாவது காங்கிரசுக்குக் கிடைக்கக் கூடிய ராஜ்யசபா எம்.பி. பதவியை பறித்து விட வேண்டும் என்பதுதான் அவர்களின் முதல் குறிக்கோளாக உள்ளது.
இதன் காரணமாக, குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி, அவர்களைப் பதவி விலக வைத்து சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தை குறைத்து வருகிறது. இது வரை 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் 65 எம்.எல்.ஏ.க்களையும் வழக்கம் போல் ஓட்டல் மற்றும் ரிசார்ட்களில் தங்க வைத்துள்ளனர். அதில் ஒரு குழுவினர் ராஜஸ்தானில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி இழுக்கும் வேலையை பாஜக தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலத்திலேயே பாஜக இந்த ஆள் இழுப்பு வேலையைத் தொடங்கியிருப்பது, காங்கிரசுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இதையடுத்து, ஜெய்ப்பூரில் ஒரு ரிசார்ட்டில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்துள்ளனர். அவர்களுடன் முதல்வர் அசோக் கெலாட் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த ராஜ்யசபா தேர்தல் 2 மாதங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். ஆனால், குஜராத்திலும், ராஜஸ்தானிலும் எம்.எல்.ஏ.க்களை விலை பேசி வாங்கும் வேலையை பாஜக முடிக்காததால், இப்போது தேர்தல் நடக்கிறது. ஆனால், ராஜஸ்தானைப் பொறுத்தவரை இன்னும் அதே நிலைமைதான். அவர்களால் எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த குதிரைப் பேர அரசியலை பாஜக செய்யும்? காங்கிரஸ் உங்களைத் திருப்பி அடிக்கும் காலம் நிச்சயம் ஒரு நாள் வரும். மக்கள் எல்லாவற்றையும் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். நாங்கள் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறுவோம். நாளையும் எம்.எல்.ஏக்களை சந்திப்பேன்.
இவ்வாறு கெலாட் தெரிவித்தார்.