இம்மாதம் 16, 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணி, ஊரடங்கு குறித்து அவர் விவாதிக்கவுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதற்கிடையே, கொரோனா பரவாமல் இருப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 16, 17ம் தேதிகளில் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தவுள்ளார். 16ம் தேதியன்று பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகாண்ட், ஜார்கண்ட், சட்டீஸ்கர், திரிபுரா, இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, லடாக், புதுச்சேரி, அருணாசலப் பிரதேசம், மேகாலயா, அந்தமான், டையூடாமன், சிக்கிம், லட்சத்தீவு ஆகிய மாநில, யூனியன் பிரதேச முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ம.பி., குஜராத் உள்ளிட்ட இதர மாநிலங்களின் முதல்வர்களுடன் ஜூன் 17ம் தேதி பிரதமர் ஆலோசிக்கவுள்ளார். இதில், இம்மாதம் முடிவடையும் ஊரடங்கை கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் தொடர்வதா, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்டவை குறித்து பிரதமர் கருத்துக் கேட்கவிருக்கிறார். ஏற்கனவே மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 4 முறை விவாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.