கொல்கத்தாவில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களைக் கயிறு கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகவே கவர்னர் தங்கர், அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.மேற்கு வங்க மாநிலத்தில் இது வரை 5581 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 450க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பலியான 14 பேரின் சடலங்களை நகராட்சி வேனில் எடுத்துச் சென்றுள்ளனர். வேனில் இருந்து உடல்களை இறக்கி தகனத்திற்குக் கொண்டு சென்ற போது, அவற்றைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த சமயம், அப்பகுதி மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்ததுடன், சுடுகாட்டுக் கதவைப் பூட்டி பூட்டுப் போட்டனர்.
இதற்கிடையே, சடலங்களை ஊழியர் ஒருவர் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரதரவென இழுத்துச் செல்லும் காட்சியை யாரோ ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவே, அது வைரலாகி விட்டது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்களும், மக்களும் கொதிப்படைந்து கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து, மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் டங்கர் இந்த சம்பவம் குறித்து, அம்மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார். இது பற்றி, கவர்னர் தங்கர் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் மோசமானது. கொரோனா நோயாளிகளின் கடைசி நேரம் எப்படி இருந்தது, எப்படி அவர்கள் இறந்தார்கள் என்பதை எல்லாம் விசாரிக்க வேண்டும். நான் தலைமைச் செயலருக்கும், உள்துறைச் செயலருக்கும் அனுப்பிய கடிதத்திற்கு உள்துறைச் செயலாளர் பதில் அளித்துள்ளார்.அதில் அவர், கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். எனவே, இது பற்றி முழு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.