சீனா திடீர் தாக்குதல்.. தமிழக வீரர் உள்பட 20 இந்திய வீரர்கள் பலி..

India, China troops clash that killed 20 soldiers at Galwan says army.

by எஸ். எம். கணபதி, Jun 17, 2020, 08:40 AM IST

லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் தவித்துக் கொண்டிருக்க, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. கிழக்கு லடாக் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணியைத் தடுக்கும் வகையில் சீன படைகள் மோதலை ஆரம்பித்தன. கடந்த சில நாட்களாக இருதரப்பு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதையடுத்து, கடந்த 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.


இந்நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பிலும் ஆயுதங்கள் இல்லாமல் நடந்த கற்கள், கம்பிகளால் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் இந்தியா தரப்பில் ராணுவ அதிகாரி (கர்னல்) ஒருவரும், 2 வீரர்களும் பலியானதாக நேற்று காலையில் தகவல் வெளியாகியது. வீரமரணம் அடைந்த வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) என்பதும் தெரிய வந்தது.
இதன்பிறகு நேற்றிரவு வெளியான தகவலில், இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகத் தெரிய வந்தது. இதை ராணுவம் உறுதி செய்தது. மேலும், இந்தியா தரப்பில் பதிலடி கொடுத்ததில், சீனாவின் 43 வீரர்கள் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், இருதரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லிஜியான் கூறுகையில், இந்தியா எல்லைக்கோட்டில் அத்துமீறக் கூடாது. எல்லையில் நடக்கும் மோதலில் சீனா உரியப் பதிலடி கொடுக்கும். சுமுகமான ஒப்பந்தத்திற்கு இந்தியா கட்டுப்பட வேண்டும் என்றார். இதனிடையே, இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

You'r reading சீனா திடீர் தாக்குதல்.. தமிழக வீரர் உள்பட 20 இந்திய வீரர்கள் பலி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை