டோக்கியோ தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கங்கள் இணைந்து கங்கை அமரனைக் கவுரவிக்கும் விழாவை வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு இணையத்தில் நடத்துகிறது.டோக்கியோ தமிழ்ச் சங்கம் முதல் முறையாக கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, கிரேஸி மோகனின் நினைவலை நிகழ்ச்சியை நேரலையில் நடத்தியது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த கட்டமாக, உலக தமிழ்ச் சங்கங்களின் முயற்சியில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனைக் கவுரவிக்கும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது.
திரையுலக கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த பாடகர்களுடன் இணைந்து, ரம்மியமான பாடல்களை இசைத்து இந்நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார்கள். உலக இசை தினம் கொண்டாடப்படும் வேளையில், இசையமைப்பாளர் கங்கை அமரனைக் கவுரவிக்கும் நிகழ்வில் டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா தமிழ் எக்ஸ்பர்ட்ஸ் மன்றம் இணைந்து செயல்படவிருக்கின்றன.
கடந்த 1975ம் ஆண்டில் இளையராஜாவுடன் இணைந்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கிய கங்கை அமரன், 2500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 17திரைப்படங்களை இயக்கியுள்ளார். 127 படங்களில் இசையமைப்பாளர், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் இருந்துள்ளார். சில படங்களைத் தயாரித்திருக்கிறார்.
இப்படி கலையுலகில் சாதனை படைத்த கங்கை அமரனை கவுரவிக்க உலக இசை தினமான ஜூன் 21-ம் தேதியன்று டோக்கியோ தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த கணேசன் ஹரி நாராயணன் ஏற்பாடு செய்திருக்கிறார். மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எக்ஸ்பேட்ஸ் மற்றும் உலகெங்கும் உள்ள 30-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து உலக இசை தினத்தை நேரலையில் சிறப்பாகக் கொண்டாடவுள்ளனர்.
இந்நிகழ்ச்சி இந்திய நேரப்படி 21ம் தேதி மாலை 4 மணி, மலேசியா நேரம் மாலை 6.30 மணி, ஜப்பானிய நேரம் இரவு 7.30 மணிக்கும் டோக்கியோ தமிழ்ச் சங்கம், மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம், பொன்மாலை பொழுது UAE, தாய்லாந்து தமிழ்ச் சங்கம், இந்தோனேசியா தமிழ்ச் சங்கம், தமிழர் INC, மெல்போர்ன், ஆஸ்திரேலியா மணிலா தமிழ்ச் சங்கம், டாமன் முத்தமிழ் மன்றம், UAE தமிழ்ச் சங்கம், ஸ்லவ் தமிழ்ச் சங்கம் UK, ட்வின் சிட்டிஸ் தமிழ் அசோசியேஷன் மினசோட்டா USA, ஐ ஃபார் இந்தியா, UK, தமனிக்கா TV, கலிபோஃர்னியா டிவி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உலக தமிழ்ச் சங்கங்களின் ஃபேஸ்புக் பக்கங்களிலும் சாணக்யா யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பாகிறது.