தமிழகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டியுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தான் கொரோனா பரவல் தற்போது உச்சத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்18) ஒரே நாளில் 2091 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 51 பேரும் அடக்கம்.
கத்தாரில் இருந்து வந்த 6 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேர், மாலத்தீவு 2 பேர், டெல்லி 6 பேர், மகாராஷ்டிரா 23 பேர், கேரளா 3 பேர், குஜராத் 3 பேர், ராஜஸ்தான் 2 பேர், அசாம், கோவா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 52,334 பேராக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1017 பேரையும் சேர்த்து 28,641 பேர் குணம் அடைந்துள்ளனர்.சென்னையில் மட்டும் நேற்று 1373 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 37,070 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் நேற்று 115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 3285 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 123 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 2155பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 55 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 945 பேருக்கும் இது வரை கொரோனா பரவியிருக்கிறது.
இது வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில்தான் பெரும்பாலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மாநிலம் முழுவதுமே தொற்று பரவி வருகிறது. நேற்று, திருவண்ணாமலையில் 27 பேர், கோவை 23, கடலூர் 17, கன்னியாகுமரி 10, மதுரை 9, ராமநாதபுரம் 28, ராணிப்பேட்டை 18, சேலம் 14, சிவகங்கை 15, தென்காசி 33, தஞ்சாவூர் 21, தூத்துக்குடி 26, நெல்லை 19, திருச்சி 14, வேலூர் 55, விழுப்புரம் 26 மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 13 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 49 பேர் பலியாயினர். இதை அடுத்து, சாவு எண்ணிக்கை 625 ஆக உயர்ந்தது.