இந்தியா, சீனா இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் நாங்கள் பேசி வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படவே இல்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியா, சீனா இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அங்கு மிகவும் கடினமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் இந்தியாவிடமும், சீனாவிடமும் பேசி வருகிறோம். அவர்கள் தற்போது விட்டுக் கொடுத்து வருகிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்களின் பிரச்சனையைத் தீர்க்க நாங்கள் உதவ முயற்சித்து வருகிறோம்.
இ்வ்வாறு டிரம்ப் தெரிவித்தார். சீனா ஊடுருவல் பிரச்சனைக்கு முன்பு ஒரு நாள் டிரம்ப் பேட்டியளிக்கும் போது, மோடியிடம் பேசினேன். சீன விவகாரத்தால் அவர் கவலையில் இருக்கிறார் என்று கூறினார். ஆனால், பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசவே இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அதை மறுத்தது குறிப்பிடத்தக்கது.