கொரோனா பரவும் நேரத்தில், நமது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த சில யோகா பயிற்சிகள் உதவும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.இன்று 6வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது: சர்வதேச ஒற்றுமையைப் பறைசாற்றும் நாளாக யோகா தினம் அமைந்துள்ளது. வீட்டிலிருந்தபடியே அனைவரும் யோகா செய்ய வேண்டும். இதை அன்றாட வாழ்வில் ஒரு நிகழ்வாகப் பழகிக் கொள்ளுங்கள். இன்றைய கொரோனா காலத்தில் யோகாவின் தேவையை உலகம் உணர்ந்துள்ளது.
நமது நோய் எதிர்ப்புச் சக்தி வலுவாக இருந்தால், அது நோய்க்கு எதிராகப் போராட உதவும். சில வகையான யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியையும், உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.
கொரோனா வைரஸ் நமது சுவாச மண்டலத்தைத்தான் பாதிக்கச் செய்கிறது. பிரணாயாமம் என்ற சுவாசப் பயிற்சியை மேற்கொண்டால் சுவாச மண்டலத்தை வலிமையாக்கி, கொரோனாவை எதிர் கொள்ளலாம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு யோகா தின நிகழ்ச்சி எதிலும் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சரகள் பலரும் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.